Friday, September 22, 2017

4. மூன்றாவது அத்தியாயம் - கர்ம யோகம்

1. அர்ஜுனன் கூறினான்:
ஜனார்த்தனா (ஜனங்களைக் காப்பவனே)! கர்மத்தை விட (செயல்களில் ஈடுபடுவதை விட), ஞானமே சிறந்தது என்று நீ கருதுவாயானால், என்னை ஏன் இந்தக் கொடூரச் செயல்களில் ஈடுபடச் சொல்கிறாய்?

2. ஒன்றுக்கொன்று முரண்பாடான கருத்துக்களைக் கூறும் உன் பேச்சினால் என் மனம் குழம்பிப் போயிருக்கிறது. எது (எந்த வழி) எனக்குப் பயனளிக்கும் என்று சிந்தித்து அதை (அந்த வழியை) எனக்குக் கூறு.

3. கிருஷ்ணர் கூறினார்:
இதற்கு முன்பு என்னால் இரண்டு வழிகள் கூறப்பட்டுள்ளன. சாங்க்யயோகிகளுக்கு (அறிவைக் கருவியாகப் பயன்படுத்துபவர்கள்) ஞானயோகம், கர்மயோகிகளுக்குக் கர்மயோகம்.

4. ஒருவன் கர்மாக்களை (விதிக்கப்பட்ட கடமைகளை)ச் செய்யாமல், கர்மாக்களின் தளைகளிலிருந்து விடுபட முடியாது. கர்மங்களைத் துறப்பதால் சித்தி என்னும் முழு நிலயை அடையவும் முடியாது.

5. ஒருவன் செயல் எதிலும் ஈடுபடாமல் ஒரு கணம் கூட இருக்க முடியாது. எல்லா உயிரினங்களுமே தங்கள் இயல்பால் உந்தப்பட்டு செயல்களில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

6. ஒருவன் புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருந்தாலும், தன் மனதுக்குள் புலன்களுக்கு இன்பம் அளிக்கும் பொருட்களைப் பற்றி   நினைத்துக் கொண்டிருப்பானேயானால், அந்த மூடனை வேஷதாரி என்றுதான் கூற வேண்டும்.

7. எவன் ஒருவன் தன் மனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் தன் புலன்களைக் கட்டுப் படுத்துகிறானோ அவன் ஒரு கர்மயோகியாக, தன் புலன்கள் மூலம் செய்யும், பயன் கருதாத செயல்களால் சிறந்து விளங்குகிறான்.

8. உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நீ செய்ய வேண்டும். ஏனெனில், செயல்களைத் துறப்பதை விடச் செயலில் ஈடுபடுவது உயர்வானது. செயல்களைக் கை விட்டு விடுவதால், உன் உடலைப் பராமரிப்பது கூட இயலாமல் போய் விடும்.

9. யாகங்கள் குறித்த செயல்களைத் தவிர்த்துப் பார்த்தால், இந்த உலகம் செயல்களால் கட்டப்பட்டிருக்கிறது. ஆதலால் தியாக உள்ளத்துடன் உன் கடமைகளை நீ செவ்வனே செய்ய வேண்டும்.

10. படைப்பைத் துவங்கிய காலத்தில் பிரம்மா, இறைவன் பொருட்டு யாகம் செய்து மனிதர்களைப் படைத்தபின், சொன்னார்: யாகங்கள் செய்வதன் மூலம் நீங்கள் பெருகி வளர்வீர்களாக! நீங்கள் விரும்புவதையெல்லாம் யாகம் உங்களுக்கு அளிக்கட்டும்.

11. யாகங்கள் மூலம் நீங்கள் தேவர்களைத் திருப்தி செய்யுங்கள். தேவர்கள் நீங்கள் விரும்புவதை அளிப்பார்கள். ஒருவரை ஒருவர் திருப்தி செய்வதன் மூலம் நீங்கள் உயர்ந்த நிலையை அடைவீர்கள்.

12. யாகங்களினால் திருப்தி அடைந்த தேவர்கள் நீங்கள் விரும்பிய செல்வங்களை உங்களுக்கு அளிப்பார்கள். ஆகவே தனக்குக் கிடைத்த செல்வங்களை இறைவனுக்கு அர்ப்பணிக்காமல் அனுபவிப்பவன் திருடனுக்குச் சமானவன்.

13. இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டு மிகுதியை அனுபவிக்கும் சான்றோர் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுவார்கள். தங்கள் உடலைப் பேணுவதற்காக மட்டும் சமைத்து உண்பவர்கள் பாவங்களையே உண்கிறார்கள்.

14. ஜீவராசிகள் அனைத்தும் உணவிலிருந்து உருவாகின்றன. உணவு மழையிலிருந்து உருவாகிறது. மழை இறைவனைக் குறித்துச் செய்யப்படும் யாகங்களிலிருந்து உண்டாகிறது. யாகம் கர்மத்தினால் (செயலினால்) விளைகிறது.

15. கர்மா (செயல்) வேதங்களினால் விதிக்கப்பட்டிருக்கிறது. வேதங்கள் பரம்பொருளால் உருவாக்கப்பட்டவை. எனவே பரம்பொருள் வேதங்களால் விதிக்கப்பட்டிருக்கும் யாகங்களில் நிலை பெற்றிருக்கிறது.

16. வேதங்களினால் விதிக்கப்பட்ட கடமைகளைப் பின்பற்றாத மனிதன் பாவத்தில் உழன்று புலன் இன்பங்களை நுகர்வதில் தன் வாழ்வை வீணாக்குகிறான்.

17. ஆனால் தனக்குள்ளேயே திருப்தி அடைந்து, தனக்குள்ளேயே மகிழ்ந்து ஆனந்தமாக இருப்பவன் செயல்களிலிருந்து விடுபட்டவன் ஆகிறான்.

18. அத்தகைய மனிதனுக்கு எந்த ஒரு செயலினாலும் கிடைக்க வேண்டிய பலன் ஏதும் இல்லை. ஒரு செயலைச் செய்யாமல் இருப்பதால் பாவமும் அவனை வந்து சேர்வதில்லை. வேறு எந்த ஜீவராசியையும் அவன் சார்ந்திருக்க வேண்டியதில்லை.

19. அதனால் உனக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளை விருப்பு வெறுப்பின்றி நிறைவாகச் செய். தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை விருப்பு வெறுப்பின்றிச் செய்பவன் உயர்ந்த நிலையை அடைகிறான்.

20. தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் சரியாகச் செய்ததன் மூலம் ஜனகர் போன்றவர்கள் முழுமையான நிலையை அடைந்தார்கள். உலக நன்மையைக் கருதி, நீயும் உன் கடமையைச் செய்ய வேண்டும்.

21. ஒரு உயர்ந்த மனிதன் எவற்றைப் பின்பற்றுகிறானோ, அவற்றைத்தான் சாதாரண மனிதனும் பின்பற்றுவான். உயர்ந்த மனிதன் வகுக்கும் நெறிகளை சாதாரண மனிதன் ஏற்றுக்கொள்வான்.

22. அர்ஜுனா! மூவுலகங்களிலும் எனக்கு விதிக்கப்பட்ட கடமைகள் எதுவும் இல்லை. நான் அடைய வேண்டியது எதுவும் இல்லை. ஆயினும் நான் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்.

23. விதிக்கப்பட்ட கடமைகளை நான் செய்யாமல் இருந்தால், மனிதர்கள் என் வழியைப் பின்பற்றத் துவங்கி விடுவார்கள்.

24. என்னுடைய கடமைகளை நான் செய்யாமல் விட்டு விட்டால், அது  மூன்று உலகங்களின் அழிவுக்கு வழி வகுக்கும். குழப்பங்களுக்கும் ஜீவராசிகளின் அழிவுக்கும் நான் காரணமாகி விடுவேன்.

25. அர்ஜுனா! ஞானம் இல்லாதவர்கள் எப்படி (பலன்களில்) பற்று வைத்துச் செயல்களில் ஈடுபடுகிறார்களோ, அதுபோல் ஞானம் பெற்றவர்கள் பற்றற்ற நிலையில் உலக நன்மையைக் கருத்தில் கொண்டு செயல்களில் ஈடுபட வேண்டும்.

26. ஞானம் பெற்றவர்கள், புலன்களில் பற்று வைத்துச் செயல் புரியும் அஞ்ஞானிகளின் மனதில் குழப்பத்தை விளைவிக்கக் கூடாது. பற்றற்ற நிலையை அடைந்து விட்டதால், ஞானிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதன் மூலம் அஞ்ஞானிகளும் தங்கள் கடமைகளைச் செய்யத் தூண்டுகோலாக (உதாரணமாக) விளங்க வேண்டும்.

27. எல்லாச் செயல்களும், மனிதர்களுக்கு இயற்கையாக அமைந்த சத்வ, ரஜஸ், தமோ என்ற மூன்று குணங்களால்தான் நிகழ்கின்றன. ஆனால், தான் என்ற அகங்காரத்தால் பீடிக்கப்பட்டிருப்பவன் இவற்றை 'நான் செய்கிறேன்' என்று கருதிக் கொள்கிறான்.

28. ஆனால் உண்மையை அறிந்தவன் குணங்கள் தங்கள் பல்வகைத் தன்மைகளினால் செயல்களை உருவாக்குவதையும், குணங்கள் புலன்கள் மூலம் செயல்பட்டுப் புலன்களால் நுகரப்படும் பொருட்களை நோக்கிச் செல்வதையும் உணர்ந்து பற்றற்றவனாக இருக்கிறான்.

29. இயற்கையாக அமைந்த குணங்களின் ஆளுமைக்குத் தங்களை உட்படுத்திக் கொண்டவர்கள், குணங்களால் நிகழும் செயல்களுடன் தங்களைப் பிணைத்துக் கொள்கிறார்கள். குணங்களைப் பற்றிச் சரியாக அறிந்து கொண்டவர்கள் அறியாமையால் பீடிக்கப்பட்டவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது.

30. எல்லாச் செயல்களையும் எனக்கு அர்ப்பணித்து, தனது என்று எதையும் கருதாமல், பலன் எதிலும் ஈடுபாடு இல்லாமல் ஆத்மாவில் மனதை நிறுத்தி, துயரம் கொள்ளாமல் போராடு.

31. என்னுடைய போதனைகளை நம்பிக்கையுடனும், குறை கூறாமலும் கடைப்பிடிப்பவர்கள் தங்கள் செயல்களின் விளைவுகளிலிருந்து விடுபடுவார்கள்.

32. ஆனால், தேவையற்ற சந்தேகங்களினால் என் போதனைகளைப் பின்பற்றத் தவறுபவர்கள் அறியாமைக்கு ஆட்பட்டு, வாழ்கையின் அர்த்தத்தை உணராமல் ஞானமற்றவர்களாகிறார்கள்.

33. அறிவுடன் விளங்குபவன் கூட அவன் இயல்பின்படிதான் செயல்படுகிறான். எல்லா உயிரினங்களும் அவரவர் இயல்பினால்தான் இயக்கப்படுகிறார்கள். ஆகவே, கட்டுப்பாட்டினால் என்ன பயன் விளையும்?

34. பொருட்களின் மீது ஏற்படும் விருப்பு வெறுப்புகளினால் புலன்கள் இயங்குகின்றன. நாம் அவற்றின் (புலன்களின்) கட்டுப்பாட்டில் இயங்கக் கூடாது. ஏனெனில் நம் முன்னேற்றத்துக்கு அவை தடைக்கற்களாகும்.

35. ஒருவன், மற்றவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் பணிகளைச் சிறப்பாகச் செய்வதை விடத் தனக்கு விதிக்கப்பட்ட பணிகளைப் பலனுக்காகச் செய்வது கூடச் சிறந்தது. தனக்கு விதிக்கப்பட்ட பணிகளைச் செய்வதால் மரணம் ஏற்பட்டால் கூடப் பரவாயில்லை. மற்றவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் பணிகளைச் செய்வது அழிவுக்குத்தான் இட்டுச் செல்லும்.

36. அர்ஜுனன் கூறினான்:
திருமாலின் மறு உருவே! ஒருவன், தன் விருப்பத்துக்கு எதிராகவும் கூட, பலவந்தத்துக்கு ஆளானவன் போல் பாவச் செயல்களில் ஈடுபடும்படி அவனைத் தூண்டுவது எது?

37. கிருஷ்ணர் கூறினார்:
ரஜோ குணம் என்று அழைக்கப்படும் உணர்ச்சி நிலையின் காரணமாக எழும் ஆசைதான் இதற்கு காரணம். இந்த ஆசை பின்னால் கோபமாக மாறுகிறது. ஆசை எல்லாவற்றையும் விழுங்கக் கூடியது, மிகவும் பாவமயமானது. அது இவ்வுலகில் ஒருவனுக்கு மிகப் பெரிய எதிரி என்று அறிவாயாக.

38. புகையினால் நெருப்பு மறைக்கப்படுவது போலவும், தூசியினால் கண்ணாடி மறைக்கப்படுவது போலவும், கருப்பையினால் கரு மறைக்கப்படுவது போலவும், இந்த உண்மை அந்த ஆசையினால் மறைக்கப்பட்டிருக்கிறது.

39. அணைக்கப்பட முடியாத நெருப்பு போன்ற இந்த ஆசை ஞானிகளின் அறிவைக் கூட மறைத்து விடுகிறது.

40. புலன்கள், மனம், அறிவு ஆகியவற்றில் வலுவாக நிலைபெற்றிருக்கும் இந்த ஆசை, ஒருவனின் அறிவைச் செயலற்றதாகச் செய்து அவனை மயக்குகிறது.

41. அதனால் அர்ஜுனா, பாவத்தின் உருவமாக விளங்கி, அறிவுக்கும் ஆத்மஞானத்துக்கும் கேடாக விளங்கும் இந்த ஆசையை, ஐம்புலன்களை அடக்குவதன் மூலம் நீ அழிக்க வேண்டும்.

42. ஐம்புலன்களும் உயர்வானவை. புலன்களை விட மனம் உயர்ந்தது. மனத்தை விட அறிவு உயர்ந்தது. அறிவை விட உயர்ந்தது ஆத்மா.

43. புஜபலம் மிகுந்த அர்ஜுனா! அதனால் அறிவை விட ஆத்மா உயர்ந்தது என்பதை உணர்ந்து, ஆத்மஞானத்தால் உன் மனதை சமநிலைப்படுத்தி, ஆசை என்னும் திருப்திப் படுத்த முடியாத எதிரியை வெற்றி கொள்.