Friday, February 23, 2018

5. நான்காவது அத்தியாயம் - ஞான யோகம்

1. கிருஷ்ணர் கூறினார்:
அழிவற்ற இந்த யோகக்கலையை நான் முதலில் சூரியனுக்குக் கற்பித்தேன் . சூரியன் (அவரது புதல்வரான) மனுவுக்கும், மனு (அவரது புதல்வரான) இக்ஷ்வாகுவுக்கும் கற்பித்தனர்.

2. இவ்வாறாக இந்த யோகக்கலையைப் பரம்பரை வழியே ராஜரிஷிகளான மன்னர்கள் அறிந்தனர். ஆனால் காலப்போக்கிக்கில் இந்த மகத்தான யோகக்கலை அழிந்து விட்டது.

3. புராதனமான  இந்த யோகக்கலையை நான் இன்று உனக்குக் கற்பிக்கப் போகிறேன். நீ என் பக்தன் மட்டும் அல்லாமல், என்  நண்பனும் கூட என்பதால் இந்த மேலான ரகசியத்தை உனக்குச் சொல்லப் போகிறேன்.

4. அர்ஜுனன் கூறினான்:
நீ சமீபத்தில் பிறந்தவன். சூரியன் நெடுங்காலத்துக்கு முன்பு தோன்றியவன். புராதன காலத்தில் நீ எப்படி சூரியனுக்கு போதித்திருக்க முடியும் என்பது எனக்கு விளங்கவில்லை.

5. பகவான் கூறினார்:
உனக்கும் எனக்கும் பல பிறவிகள் நிகழ்ந்து விட்டன. அவை எல்லாவற்றையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் நீ அவற்றை அறிய மாட்டாய்.

6. நான் பிறப்பும் இறப்பும் இல்லாதவன், மாற்றம் இல்லாதவன், எல்லா உயிர்களுக்கும் இறைவன். ஆயினும், என்னுடைய இயற்கையினால், என் சக்தியைப் பயன்படுத்தி இந்த உலகில் நான் தோன்றுகிறேன்.

7. எப்போதெல்லாம் தர்மம் பலமிழந்து போய், அதர்மம் வலுப்பெறுகிறதோ, அப்போதெல்லாம் நான் இவ்வுலகில் தோன்றுவேன்.

8. நல்லவர்களைக் காப்பதற்காகவும், தீயவர்களை அழிப்பதற்காகவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும், ஒவ்வொரு யுகத்திலும் நான் பிறவி எடுக்கிறேன்.

9. என் பிறப்பு, செயல்கள் ஆகியவற்றின் தெய்வீகத் தன்மையை எவன் ஒருவன் நன்கு அறிந்து கொள்கிறானோ, அவன் இந்தப் பிறவி முடிந்து தன் உடலை விட்டு நீங்கிய பிறகு மீண்டும் பிறக்க மாட்டான். அவன் என்னை வந்தடைவான் .

10. பற்று, பயம், கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, என்னிடம் ஈடுபாடு கொண்ட பலர் ஞானத்தினாலும், தவத்தினாலும் தூய்மை அடைந்து  என்னை அடைந்துள்ளனர்.

11. யார் என்னை எந்த விதத்தில் சரணடைந்தாலும், நான் அவர்களைத் தகுந்த விதத்தில் காத்தருள்வேன். அர்ஜுனா! எல்லா மனிதர்களும், எல்லா விதத்திலும் என்னுடைய பாதையைத்தான் பின்பற்றுகிறார்கள்.

12. இந்த உலகில் செயல்கள் மூலம்தான்  விரைவான வெற்றியைப் பெற முடியும் என்பதால், செயல்களில் வெற்றி  காண விரும்புபவர்கள் பல்வேறு தெய்வங்களை வழிபடுகிறார்கள்.

13. குணங்கள், செயல்கள் ஆகியவற்றின் வேறுபாடுகளுக்கேற்ப நான்கு  வர்ணங்களும் என்னால் உருவாக்கப்பட்டன. ஆயினும் இவற்றை உருவாக்கிய நான் மாறுதலற்றவன் என்பதால், எனக்குச்  செயல்கள் எதுவும் இல்லை என்பதை அறிவாயாக.

14.  செயல்கள் என்னைக் கட்டுப்படுத்துவதில்லை. என் செயல்கள்  பலன்களைக் குறி வைத்து நிகழ்த்தப்படுவதும் இல்லை. என்னைப் பற்றிய இந்த உண்மையை அறிந்தவன் தன் செயல்களின் விளைவுகளால் கட்டுப்படுத்தப்படுவதில்லை.

15. இதை உணர்ந்திருந்ததால், உனக்கு முன்பு வாழ்ந்த, செயல்களிலிருந்து விடுபட விரும்பியவர்கள் கூட செயல்களில் ஈடுபட்டார்கள். எனவே, இத்தகைய முன்னோர்களைப்  பின்பற்றி நீயும் செயல்களில்  ஈடுபட வேண்டும்.

16. எது செயல், எது செயல் இல்லை என்று பிரித்து உணர்வதில்  கற்றறிந்தவர்களுக்குக் கூடக் குழப்பம் ஏற்படுகிறது. எனவே, எது செயல் என்பது குறித்து நான் உனக்கு விளக்குகிறேன்.இதை அறிந்து கொண்டால் நீ துன்பங்களிலிருந்து விடுபடலாம்.

17. செய்ய வேண்டிய செயல்கள் எவை, செய்யக்கூடாத செயல்கள் எவை, ஒன்றுமே செய்யாமல் இருப்பது எது ஆகியவை பற்றி நீ அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் செயலின் தன்மை பற்றி அறிந்து கொள்வது மிகவும் கடினம்.

18. செயல்களில் செயலற்ற தன்மையையும், செயலற்றிருப்பதில் செயலையும் காணும் வல்லமை படைத்தவனே மனிதர்களுக்குள் புத்திசாலி. அவனே  செயல்களை முழுமையாகச் செய்பவன்.

19. எவன் ஒருவன் பலன்களைக் கருதாமல் செயலில் ஈடுபடுகிறானோ, எவனுடைய செயல்கள் தூய அறிவு என்னும் நெருப்பில் புடம் போடப்பட்டிருக்கின்றனவோ, அவனே கற்றறிந்தவன் என்று ஞானிகளால் கருதப்படுகிறான்.

20. பலன்களின் மீதான ஆசையைக் கைவிட்டு, எப்போதும்  மனநிறைவுடனும், புற விஷயங்களைச் சார்ந்திருக்கும் தேவை இல்லாமலும் இருப்பவன், செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், எதையும்  செய்யாதவனாகவே இருப்பான்.

21. ஆசைகள் இல்லாமலும், உடலையும், மனதையும் கட்டுப்படுத்தியும், எந்தப் பொருளும் தனக்குச் சொந்தம் என்று நினைக்காமலும் உயிர் வாழ்வதற்காக உடலைப் பேணும் செயல்களில் மட்டும் ஈடுபட்டும் இருக்கும் ஒருவன் பாவ விளைவுகளிலிருந்து விடுபட்டிருப்பான்.

22. தானாகக் கிடைப்பதில் திருப்தி அடைந்து, (சுகம்- துக்கம்,நன்மை-தீமை  போன்ற) இரு நிலைகளை உணர்ந்து, பிறர் மீது பொறாமை கொள்ளாமல், வெற்றி தோல்விகளைச் சமமாக நினைப்பவன் தன் செயல்களினால் பாதிக்கப்பட்ட மாட்டான்.

23. பொருட்களின் மீது பற்றில்லாமல், விடுதலை அடைந்தவனாக, எல்லாம் கடந்த நிலையில் மனத்தை நிறுத்தியவனாக தன் செயல்களை அர்ப்பண உணர்வுடன் செய்பவனை அவன் செயல்களின் விளைவுகள் பாதிப்பதில்லை.

24. யாகம் பிரம்மம். யாகத்தில் அளிக்கப்படும் நெய்  போன்ற பொருட்கள் பிரம்மம், யாகத்தீ, யாகம் குறித்து செய்யப்படும் செயல்கள் இவை எல்லாமே பிரம்மம்தான். எல்லாமே பிரம்மம் என்று நினைத்துச் செயல்படுவதுதான் பிரம்மத்தை அடையும் வழி.

25. சிலர்  யாகம் போன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலம் பல்வேறு தெய்வங்களை வழிபடுகின்றனர். வேறு சிலர் பிரம்மம் என்ற நெருப்பில் அனைத்தையும் தியாகம் செய்வதையே வழிபாடாகக் கொள்கின்றனர்.

26. சிலர் கேட்டல், பார்த்தல் போன்ற புலன் இன்பங்களை, துறவு என்ற யாகத்தீயில் யாகப்பொருட்களாக அர்ப்பணிக்கின்றனர். வேறு சிலர் புலன்களினால் கிடைக்கும் இன்பங்களை புலன்கள் என்னும் யாகத்தீயில் யாகப்பொருட்களாக அர்ப்பணிக்கின்றனர்.

27. வேறு சிலர் மனத்தையும் புலன்களையும் கட்டுப்படுத்தி உயர்ந்த ஞானத்தை அடையும் நோக்கத்துடன், ஞானத்தினால் ஏற்றப்பட்ட சுயக்கட்டுப்பாடு என்னும் நெருப்பில் தங்கள் புலன்களின் செயல்பாடுகளையும், உயிர்வாழ்வதற்கான செயல்பாடுகளையும் யாகப்பொருட்களாக அர்ப்பணிக்கிறார்கள்.

28. சிலர்  பொருட்களையும், சிலர் கட்டுப்பாடான வாழ்க்கையையும், சிலர்  (ஹட யோகம், ராஜ யோகம் போன்ற) யோகங்களையும், சிலர் வேதங்களைக் கற்பதையும், சிலர் தாங்கள் கற்றறிந்தவற்றையும், சிலர் கடுமையான விரதங்களையும் யாகப்பொருட்களாக அர்ப்பணிக்கிறார்கள்.

29. சிலர் வெளியேறும் மூச்சை உள்ளிழுக்கும் மூச்சுக்கும், வேறு சிலர் உள்ளிழுக்கும் மூச்சை வெளியேறும் மூச்சுக்கும் அர்ப்பணிக்கிறார்கள். இவ்விதமாக இவர்கள் உள்ளிழுக்கும் மூச்சு, வெளியேறும் மூச்சு இரண்டையும் கட்டுப்படுத்தி, மூச்சைக் கட்டுப்படுத்துகிறார்கள். இன்னும் சிலர் உணவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தங்கள் புலன்களைத் தங்கள் உயிர் மூச்சுக்கு அர்ப்பணிக்கிறார்கள்.

30. இவர்கள் எல்லாம் யாகங்களை(தியாகங்களை)ப் பற்றி நன்கு அறிந்தவர்கள். யாகங்கள் செய்வதன் மூலம் தங்களைத் தூய்மைப் படுத்திக் கொண்டவர்கள். இது போன்ற  தியாகங்களைப் புரிந்து அமிர்தத்தைச் சுவைத்தவர்கள் மிக உயர்ந்த ஞானத்தை அடைகிறார்கள்.

31. அர்ஜுனா! இது போன்ற (தி)யாகங்களைச் செய்யாதவர்கள் இந்த உலகத்தில் வாழ்வதற்கே தகுதியற்றவர்கள். அவர்கள் மோட்சம் அடைவதற்கு எப்படித் தகுதி பெற முடியும்?

32. இது போன்ற பலவிதமான (தி)யாகங்கள் வேதங்களினால் வரையறுக்கப் பாட்டிருக்கின்றன. இவை அனைத்துமே செயல்களிலிருந்துதான் பிறக்கின்றன என்பதை அறிந்தால், நீ விடுதலை பெற்றவனாவாய்.

33. எதிரிகளை வெல்பவனே! பொருட்களின் மூலம் செய்யப்படும் யாகத்தை விட அறிவு மூலம் செய்யப்படும் யாகம் உயர்ந்தது. பலனை எதிர்பார்த்துச் செய்யப்படும் எல்லாச் செயல்களும் ஞானம் பெறுவதால் முடிவுக்கு வருகின்றன.

34. ஒரு கற்றறிந்த ஆசானை அணுகி அவருக்குச் சேவை செய்து, அவரிடம் பணிவாகக் கேள்விகள் கேட்டு, இந்த யாகங்களைப்  பற்றிய அறிவைப் பெற வேண்டும். தன்னை அறிந்த, உண்மையை தரிசித்த இந்த ஞானிகள் உனக்கு இந்த ஞானத்தை வழங்குவார்கள்.

35. இந்த ஞானத்தைப் பெற்றபின் நீ மீண்டும் இது போல் மாயையில் விழ மாட்டாய். எல்லா உயிர்களையும் நீ உனக்குள்ளும் எனக்குள்ளும் பார்ப்பாய்.

36. பாவிகளுக்குள் மோசமான பாவியாக நீ இருந்தாலும், ஞானம் என்ற ஓடத்தின் மூலம் நீ எல்லாத் துயரங்களையும் கடக்கலாம்.

37. நெருப்பு மரத்தை எரித்துச் சாம்பலாக்குவது போல், கர்மத்தின் விளைவுகள் அனைத்தையும் ஞானம் என்ற தீ பொசுக்கி விடும்.

38. ஆத்மஞானத்தை விடத்  தூய்மையானது எதுவும் இவ்வுலகில் இல்லை. ஞான யோகத்தை அனுசரிப்பவன் நாளடைவில் ஆத்மஞானத்தை அடைவான்.

39. நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும், புலன்களைக் கட்டுப்படுத்தியும் செயல்படுபவன் ஆத்மஞானத்தைப் பெறுவான். ஆத்மஞானத்தைப் பெற்றபின் அவன் உயர்ந்த மன அமைதியை அடைவான்.

40. அறியாமையால் பீடிக்கப்பட்டு, ஆத்மஞானத்தில் நம்பிக்கை இல்லாமல், சந்தேகங்களுடன் வாழ்பவன் அழிவைத்தான் அடைவான். ஐயங்களுடன் வாழ்பவனுக்கு இவ்வுலகும் இல்லை, மறு உலகும் இல்லை, மகிழ்ச்சியும் இல்லை.

41. அர்ஜுனா! யோகத்தின் மூலம் செயல்களின் பலனைத் துறந்தவனுக்கு, தன ஐயங்களை ஞானத்தினால் போக்கிக்கொண்டவனுக்கு, தன்னை அறிந்தவனுக்கு, அவன் செயல்களினால் பாதிப்பு ஏற்படாது.

42. எனவே, அறியாமையால் ஆத்மா பற்றி உன் மனதில்  எழுந்திருக்கும் ஐயங்களை ஆத்மஞானம் என்ற வாளைக் கொண்டு அறுத்து எறிந்து விடு. யோகத்தில் நிலை பெற்று எழுச்சி கொள்!